Schools Opening Date Tamil News: கடந்த சில நாள்களாகவே தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுமா என்கிற கேள்வியும் குழப்பமும்தான் அதிகமாக உள்ளது. நாடெங்கிலும் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதுபற்றி நீண்ட நாள்களாக நடைபெற்ற ஆலோசனைகளின் முடிவில் நவம்பர் 16-ம் தேதி முதல் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் நாடெங்கிலும் கொண்டாடப்பட்ட தசரா விழாவைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், உலக நாடுகளில் சில, கொரோனாவின் இரண்டாவது அலை வீச்சில் காலடி எடுத்து வைத்திருக்கின்றன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானது இல்லை என்றும் மாணவர்களின் உயிரைக் கருத்தில் கொண்டு பள்ளி திறப்பைத் தள்ளிவைக்கவேண்டும் என்றும் பெற்றோர்கள் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், 'பள்ளிகள் திறப்பில் இந்த அவசரமான முடிவு ஏன்?' என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 'மாணவர்களின் உயிரே முக்கியம். எனவே பள்ளி திறப்பை ஒத்திவைக்கவேண்டும்' என நாம் தமிழர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் பள்ளிகள் திறக்கும் முடிவு பற்றி மறுபரிசீலனை செய்து, பள்ளி திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"