/tamil-ie/media/media_files/uploads/2021/07/online-education.jpg)
தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார். தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர பிற ஆண்டுகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
கொரோனா பாதிப்புகள் குறைந்த பின்னர் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து முதலமைச்சர் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஜூலை மூன்றாம் வாரத்தில் முடிவடைந்தன. 2021-22 ஆம் ஆண்டிற்கான ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்க கல்லூரிகள் உயர் கல்வித் துறையின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தன.
தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரிகளில் உள்ளக மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கான வெயிட்டேஜை அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
"அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் உள்ளக மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கு 50% வெயிட்டேஜைக் கொடுக்கும் அதே வேளையில், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளுக்கான வெயிட்டேஜ் உள்ளக தேர்வுக்கு 20% மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கு 20% ஆக உள்ளது. எனவே, அனைத்து கல்லூரிகளுக்கும் உள்ளக மற்றும் எழுத்துத் தேர்வு ஒரேமாதியான வெயிட்டேஜ் முறையை செய்ய கூட்டமைப்பு பிரதிநிதித்துவம் அளித்தது," என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆரம்பமாகியுள்ள, இரண்டு நாட்களில் 41,363 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மேலும், "பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை TNEA அவகாசம் அளித்துள்ளதால், வரும் நாட்களில் அதிகமான விண்ணப்பங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, கடந்த இரண்டு நாட்களில் 1,26,748 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்" என்றும் அமைச்சர் கூறினார்.
தமிழ்நாட்டில், 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,00,102 இடங்கள் உள்ளன. கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் www.tngasa.in மற்றும் www.tngasa.org போர்ட்டல் மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
"ஆன்லைனில் விண்ணப்பிப்பதைத் தவிர, மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் நேரடியாகவும் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்" என்று அமைச்சர் கூறினார்.
"கொரோனா தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 75% க்கும் அதிகமான கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் நாங்கள் அறிவுறுத்துவோம்" என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
பி.இ மற்றும் பி.டெக் மாணவர்கள் இறுதி ஆண்டுக்கு செல்ல தகுதியுடையவர்களாக இருக்க முதல் ஆண்டில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தை நீக்குவது குறித்து உயர்கல்வித் துறை பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.