10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்; தேர்வுக்கான ஏற்பாடுகள், கட்டுப்பாடுகள் என்ன?

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் தொடக்கம்; தேர்வுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? விதிமீறலில் ஈடுபவர்கள் மீதான நடவடிக்கைகள் என்ன? முழு விபரம் இங்கே

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் தொடக்கம்; தேர்வுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? விதிமீறலில் ஈடுபவர்கள் மீதான நடவடிக்கைகள் என்ன? முழு விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
exam

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மார்ச்/ஏப்ரல் - 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 28.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற உள்ளது. இப்பொதுத்தேர்விற்கான செய்முறைத்தேர்வுகள் 22.02.2025 முதல் 28.02.2025 வரை நடைபெற்று முடிந்துள்ளது.

Advertisment

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 12,487 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் 4,46,471 மற்றும் மாணவிகள் 4,40,499 என மொத்தம் 8,86,970 தேர்வர்களும், தனித்தேர்வர்கள் 25,841 மற்றும் சிறைவாசித் தேர்வர்கள் 273 என மொத்தம் 9,13,084 தேர்வர்கள் 4,113 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 48,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 15,729 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டத்திற்கு சென்று, தேர்விற்கு முந்தைய ஏற்பாடுகள் அனைத்தையும் பார்வையிட்டு உறுதி செய்துள்ளனர். மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில், தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும், தேர்வுப்பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல்துறைக்கும் தேர்வுமையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் தேர்வுப்பணிகளில் ஈடுபடும் அனைத்து நிலை அலுவலர்கள்/ ஆசிரியர்கள்/ பணியாளர்களுக்கு அறிவுரைக் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரை கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மேலும் 9498383075 / 9498383076 ஆகிய தேர்வுக் கட்டுப்பாட்டு தொடர்பு எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள்/தேர்வர்கள்/பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெறலாம். இதற்கென அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் என்னென்ன?

தேர்வு மைய வளாகத்திற்குள் மொபைல் போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் மொபைல் போனை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ மொபைல்போன்/இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது. அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும்அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும். மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ / ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

10th Exam School Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: