ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் 5 லட்சம் மாணவர்கள் தவிப்பு; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் 5 லட்சம் தமிழக மாணவர்கள்; 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க பெற்றோர்களும், கல்வியாளர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை
10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால், ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் 5 லட்சம் தமிழக மாணவர்கள் தவித்து வருவதாகவும், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஜே.இ.இ நுழைவுக்கு விண்ணப்ப பதிவு ஆரம்பாகியுள்ளது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த 5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள கல்வி ஆலோசகர் அஸ்வின், தமிழக அரசு பாடத்தில் படித்த சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கு இன்னும் 10 ஆம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஆனால் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு சான்றிதழ் தேவை. விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் சான்றிதழ் எண்ணும் கோரப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழை பதிவேற்றம் செய்யவும் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு விரைந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஓ.பி.சி சான்றிதழ் வழங்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதால், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கொரோனா காலத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி சரிவர செயல்படாத சூழ்நிலை இருந்ததால், அப்போது 10 ஆம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த மாணவர்களுக்கு தான் தற்போது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டே கல்வி ஆலோசகர் அஸ்வின், மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அப்படி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் அல்லது சிக்கல் ஏற்பட்டால், மத்திய அரசிடம் பேசி தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. 2020-21 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.இ.இ தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் தேர்வுக்கு அனைத்து தமிழக மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil