/tamil-ie/media/media_files/uploads/2021/09/TNPSC-1.jpg)
TNPSC News Update : தமிழகத்தில் பொதுவாக அனைத்து அரசுப்பணிக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசுப்பணி பெற முடியும் என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வுக்காக தற்போது தயாராகி வருகின்றனர். இதில் குருப் 1 குருப் 2 குருப் 4 மற்றும் விஏஓ என பல பிரிவுகளில் தேர்வுகள நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் அனைத்திற்க்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் ஒருமுறை விண்ணப்பித்தல், போன்ற ஒரு சில வழிமுறைகள் உள்ளன. ஒருமுறை விண்ணப்பத்தல் முறையில் விண்ணப்பித்தால் அந்த ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஒரு சில முறை இலவசமாக தேர்வுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வானையம் புதிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.
201 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:
விண்ணப்பதாரர் www.tnps-c-ex-ams.in, www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தங்களது ஒருமுறை பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள் விண்ணப்பதார்ரை அடையாளம் காண மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஒரு முறைப்பதிவு என்பது பதிவுசெய்த நாள் முதல் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதுமுடிந்த பின்னர், விண்ணப்பதாரர் ஒருமுறை பதிவினை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தினை செலுத்தி கட்டாயம் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.
விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரரின் கையெப்பம் மற்றும் புகைப்படம் உரிய அளவில் மற்றும் உரிய வடிவத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். புகைப்படம் மற்றும் கையெப்பம் பதிவேற்றம் செய்யப்படாமலே அல்லது தவறுதலாக பதிவேற்றம் செய்திருந்தாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இணையவழி விண்ணப்பித்தினை சமர்ப்பித்த பின்னர், விண்ணப்பதாரர் புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை மாற்ற இயலாது என்பதால் மிகுந்த கவனத்துடன் அவற்றை பதிவேற்றம் செய்ய எச்சரிக்கப்படுகிறார்கள். ஆன்லைன் வழியில் விண்ணப்பித்த பிறகு, இதுதொடர்பான எந்தவித கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தேர்வு கட்டண சலுகையை பொறுத்தவரையில், ஆதி திராவிடர், பழங்குடியினர் நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை ஆகியோர் கட்டணம் செலுத்த தேவையில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீரமரபினர், முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் 3 முறையும், முன்னாள் ராணுவத்தினர் 2 முறையும் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டண விலக்கு தொடர்பான இலவச சலுகையை பெறுவதற்கு ஆம் அல்லது இல்லை என்ற விருப்பங்களை கவனமுடைன் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார். விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்ட பின்னர் தேர்வு செய்யப்பட்ட விருப்பங்களை மாற்றவோ அல்லது திருத்தவோ இயலாது
சாதி சான்றிதழ், ஆதரவற்ற விதவை சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரருக்கான சான்றிதழ், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சான்றிதழ், தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றை போலியாக சமர்ப்பித்தல், ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களில் ஏதேனும் திருத்தங்கள் அல்லது சேதங்களை ஏற்படுத்தி இருந்தால் அந்த தேர்வர் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படுவதோடு, அவர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
தேர்வறையில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துதல், மின்னணு உபகரணங்களை வைத்திருத்தல், ஆள்மாறாட்டம், தேர்வு நடைபெறுவதை முறியடிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டாலும் தேர்வு எழுத நிரந்தமாக தடை விதிக்கப்படுவதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
தேர்வு மையத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும். குறிப்பிட்ட நேரத்துக்குள் வரத்தவறியவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கொள்குறி வகை வினாத்தாளில் தேர்வு எழுதும் தேர்வர்கள் கருப்பு நிற மை கொண்ட பந்துமுனை பேனாவை தவிர வேறு பேனாவை பயன்படுத்துவது, இணையவழி விண்ணப்பத்தில் தேர்ந்தெடுத்த விருப்பப்பாடத்தில் தேர்வு எழுதாமல் வேறு பாடத்தில் மாற்றி தேர்வு எழுதுவது, ஓ.எம்.ஆர். விடைத்தாளை முறையாக நிரப்பாமல் இருத்தல் போன்றவற்றால் தேர்வரின் விடைத்தாள் செல்லாததாக கருதப்படும்.
விண்ணப்பதாரர் விடை புத்தகத்தில் தேர்வு எண்ணை எழுதுதல், கையெப்பமிடுதல், படம் வரைதல் அடிக்கோடிடுதல், விடைகளை எழுதுதல் போன்றவைகளுக்கு கருப்பு நிற மைபேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தேர்வு மையத்துக்கு வரும்போது ஹால்டிக்கெட் கண்டிப்பாக கொண்டுவருவதுடன், ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு அட்டை (பான் கார்டு), வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை கொண்டுவர வேண்டும்.
இதில் குறிப்பாக காலிப்பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவு மற்றும் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.