பள்ளி, கல்லூரிகளுக்கான ஆசிரியர் நியமன தேர்வில், 'வெயிட்டேஜ்' எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளுக்கான ஆசிரியர்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்: TET Exam; ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாள் எப்போது? தேதி அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தை (டி.ஆர்.பி) சீரமைக்க அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அந்தஸ்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நியமிக்கப்படுவார். மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், இணை இயக்குனர், துணை இயக்குனர் அந்தஸ்து உட்பட 71 புதிய பதவிகள் உருவாக்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, ஐ.ஏ.எஸ் அந்தஸ்தில் தலைவர், பள்ளிக் கல்வி இயக்குனர் அந்தஸ்தில் இரண்டு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
நிதித்துறை செயலர் அல்லது அவரது பிரதிநிதி, பள்ளிக்கல்வித் துறை ஆணையர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லுாரி கல்வி இயக்குனர் ஆகியோர் நிர்வாக குழுவில் இடம் பெறுவர்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு அல்லது கணினி வழி தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும். போட்டி தேர்வுக்கு பின், சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு பதவிக்கு, 1.25 என்ற விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்படுவர்.
பள்ளிகள், கலை, அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் மட்டுமின்றி, பொறியியல், சட்ட கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களுக்கான பேராசிரியர்களும் டி.ஆர்.பி வழியாக தேர்வு செய்யப்படுவர்.
நீதிமன்ற வழக்குகளை கையாள சட்ட மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். வழக்குகளை விரைந்து முடிக்க, நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்கள் குழுவின் ஆலோசனை பெறப்படும்.
அனைத்து வகை போட்டி தேர்வுக்கான புத்தகங்களுடன், டிஜிட்டல் நூலகம் ஏற்படுத்தப்படும். அனைத்து பணி நியமன அமைப்புகளையும் இணைக்கும் மொபைல் செயலி உருவாக்கப்படும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) போன்று டி.ஆர்.பி.,யிலும் இனி வெயிட்டேஜ் முறை அமல்படுத்தப்படாது. அதாவது போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அவர்களின் உயர் கல்வி அல்லது வேறு தகுதி அடிப்படையில், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படாது.
டி.ஆர்.பி., அமைப்பு வெளிப்படையாகவும், அரசின் ரகசியங்களை பாதுகாத்தும் செயல்பட வேண்டியுள்ளதால், அதற்கென தனி கட்டடம் மற்றும் வளாகம் அமைக்கப்படும். இதை திட்டமிட கமிட்டி உருவாக்கப்படும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.