தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 6281க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள், அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.
இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் 2024 ஆம் ஆண்டில் 7 தேர்வுகளை நடத்துவதன் மூலம் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 6281க்கும் அதிகமான காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை இன்று (ஜனவரி 10) வெளியிட்டுள்ளது.
ஆண்டுத் திட்டத்தின் படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 2024ல் நடைபெறும். இதில் 1766 காலியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2024 ஜூன் மாதத்தில் நடைபெறும். இதற்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியிடப்படும்.
2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்படும். இதற்கான தேர்வு 2024 ஜூலை மாதத்தில் நடத்தப்படும்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். இதில் 200 காலியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகும்.
முதலமைச்சர் ஆராய்ச்சி உதவியாளர் (Chief Minister Research Fellowship) பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும். இதில் 120 பணியிடங்கள் நிரப்பப்படும்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 139 முதுநிலை விரிவுரையாளர் (26), விரிவுரையாளர் (103), இளநிலை விரிவுரையாளர் (10) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடைபெறும்.
அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 56 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2025 பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு 2024 நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும். இவ்வாறு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“