தமிழக பட்ஜெட்டில் 841 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய ஆண்டு திட்டத்தில் சற்று கூடுதலாக 1205 இடங்கள் அறிவிக்கப்படுகிறது. ஆனாலும் இது போதாது என்பது தேர்வர்கள் கருத்தாக உள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியம், அந்த ஆண்டில் நிரப்பப்படும் பணியிடங்களின் விபரங்கள், அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடைபெறும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிடும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அட்டவணை 3 மாதங்களாகியும் வெளியாகாமல் இருந்ததால் இருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், நேற்று, (மார்ச் 24) 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், உடற்கல்வி இயக்குனர் பதவிகளில் 232 பணியிடங்களை நிரப்ப மே மாதத்தில் தேர்வு நடைபெறும்.சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும். இதில் 132 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அறிவிக்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெறும். இதில் 4000 பணியிடங்கள் நிரப்பபப்படும் என்றும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிகளில் 1915 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, நவம்பரில் தேர்வு நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் பதவிகளில் 1205 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம், உத்தேசமாக 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அதிக அளவில் பணியிடங்களை தேர்வர்கள் எதிர்பார்த்தனர். தவிர ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வு தேர்ச்சி பெற்று காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் தற்போது சொற்ப எண்ணிக்கையிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வர்கள் மத்தியில் குமுறல் இருக்கிறது.
பட்ஜெட்டில் அறிவித்ததை விட தற்போது கூடுதலாக அறிவித்திருக்கும் பணியிடங்களும் கூட புதிதாக தேர்வு எழுதுபவர்களுக்கு அல்ல; ஏற்கனவே அமைச்சுப் பணியாளர்களாக பணியாற்றி நீதிமன்ற உத்தரவுப்படி பணி வாய்ப்பு பெறுபவர்களுக்கு அந்த இடங்கள் கிடைக்க இருப்பதாக ஆசிரிய தேர்வர்கள் கூறுகின்றனர்.