ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள ஆண்டு தேர்வு அட்டவணையில், இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள், அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம், ஒவ்வொரு ஆண்டுக்கும், அந்த ஆண்டில் நிரப்பப்படும் பணியிடங்களின் விபரங்கள், அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடைபெறும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிடும். இந்த ஆண்டுக்கான அட்டவணை 3 மாதங்களாகியும் வெளியாகாமல் இருந்ததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (மார்ச் 24) 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், உடற்கல்வி இயக்குனர் பதவிகளில் 232 பணியிடங்களை நிரப்ப மே மாதத்தில் தேர்வு நடைபெறும்.
சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும். இதில் 132 காலியிடங்கள் நிரப்பப்படும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெறும். இதில் 4000 பணியிடங்கள் நிரப்பபப்படும்.
முதலமைச்சர் ஆராய்ச்சி வல்லுனர் பணியிடங்களில் 180 இடங்களுக்கு ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, செப்டம்பரில் தேர்வு நடைபெறும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிகளில் 1915 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, நவம்பரில் தேர்வு நடைபெறும்.
பட்டதாரி ஆசிரியர் பதவிகளில் 1205 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடைபெறும்.
வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியாகும். 51 பணியிடங்களுக்கு 2026 மார்ச் மாதம் தேர்வு நடைபெறும்.
இருப்பினும், இந்த அறிவிப்பில் ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது நடைபெறும் எனக் குறிப்பிடப்படவில்லை. மேலும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.