தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) BVSc & AH படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிட உள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் BVSc & AH மற்றும் B Tech படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 660 இடங்களும், பி.டெக் உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம் மற்றும் கோழி தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் 100 இடங்களும் உள்ளன. இந்த ஆண்டு உடுமலைப்பேட்டை மற்றும் தேனி கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 80 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் அட்மிஷன்: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
இந்தநிலையில், தற்போது வரை BVSc & AH படிப்புக்கு 15,941 விண்ணப்பங்களும், B Tech படிப்புகளுக்கு 3,103 விண்ணப்பங்களும் ஆன்லைனில் சமர்பிக்கப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 17% அதிகமாகும். கடந்த ஆண்டு 2 படிப்புகளுக்கும் மொத்தமாக 16,287 விண்ணப்பங்கள் வந்தன. இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 30.
“கடந்த ஆண்டை விட 20% கூடுதல் விண்ணப்பங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டை விட முன்னதாகவே சேர்க்கையை தொடங்கியிருப்பதும் ஒரு முக்கிய காரணம்,” என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என் செல்வகுமார் தெரிவித்தார்.
மேலும், "BVSc மற்றும் B Tech படிப்புகளுக்கான சேர்க்கை இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்தப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும். சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஆஃப்லைன் முறையில் (நேரடியாக) நடத்தப்படும். BVSc & AH படிப்புகளுக்கு, கவுன்சிலிங் ஆன்லைனில் நடத்தப்படும். அக்டோபரில் கல்லூரிகள் தொடங்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, BVSc படிப்பில் 45 இடங்களும், பி.டெக் படிப்பில் எட்டு இடங்களும் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளன,” என்றும் துணைவேந்தர் கூறினார்.
மேலும், BVSc & AH பட்டம் பெற்றவர்களுக்கு தமிழக அரசில் கால்நடை மருத்துவர் ஆவதற்கான வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பி.டெக் பட்டதாரிகள் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறலாம், என்று துணைவேந்தர் கூறினார்.
நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் செயல்பாடு மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகள் தான் இந்த ஆண்டு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil