/tamil-ie/media/media_files/uploads/2019/08/tanuvas-123.jpg)
இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகள்
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, தஞ்சாவூர்-ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (B.V.Sc & AH) 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 597 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதுதவிர, திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன. இதில், உணவுத் தொழில்நுட்பப் படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் படிப்பில் 3 இடங்கள் அகிய இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
இந்நிலையில், பி.வி.எஸ்.சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024-25 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 3 ஆம் தேதி, காலை 10 மணி முதல் 21 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான தகவல் தொகுப்பு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு கால்நடை மருத்துவம் மற்றும் படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்பப் படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பப் படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்பப் படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.