கொரோனா பெருந்தொற்று காரணமாக, நிறுவனத்தின் நிகர லாபம் கடுமையாக வீழ்ச்சியடைந்த போதிலும், இந்த ஆண்டு பணியமர்த்தப்படுவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை போலவே இருக்கும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் நிகர லாபத்தில் 13.81% சரிவை சந்தித்துள்ளதாக டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி செர்வீசஸ்) நிறுவனம் முன்னதாக தெரிவித்தது.
இதுகுறித்து டாட்டா நிறுவனம் கூறுகையில், ” கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக மற்ற நிறுவனங்கள் புதிய ஊழியர்களைப் பணியமர்த்தும் முடிவை மறு ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், நாங்கள் கடந்த ஆண்டு 40,000 கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிய பணி நியமனக் கடிதத்தை கவுரவித்துள்ளோம். அனைவரும், ஜூலை மாதம் நடுப்பகுதியில் முறைப்படி பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். 40,000 பேரில் 87% பேர் ஏற்கனவே முறையான பயிற்சியில் உள்ளனர்” என்று தெரிவித்தது.
இந்த ஆண்டும், இதே எண்ணிகையிலான கல்லூரி மாணவர்களை பணியமர்த்த டிசிஎஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், டிசிஎஸ் பென்பொருள் நிகர லாபம் அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பிரபலமான எச் -1 பி விசாக்களை ஆண்டின் இறுதி வரையில் ரத்து செய்யப்படுவதற்கான பிரகடனத்தை வெளியிட்டார்.
அமெரிக்கா கல்வி நிறுவனங்களில் இந்த நிதியாண்டில் 2,000 மாணவர்கள் பணியமர்த்தப்படுவதாகவும் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பிரபலமான எச் -1 பி விசாக்களை ஆண்டின் இறுதி வரையில் ரத்து செய்ததன் விளைவாக அமெரிக்கா மாணவர்களை தேர்ந்தெடுக்கும் விகிதம் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா பொது முடக்கநிலை காலத்தின் போது, நடைமுறைப்படுத்தப்பட்ட Secure Borderless Workspaces (SBWS) செயல்முறையால் 90 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர் எனத் தலைமை செயல் அதிகாரி கணபதி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil