scorecardresearch

சிறு தவறால் பறிபோகும் இட ஒதுக்கீடு: அரசுப் பள்ளி ஏழை மாணவி கனவை கல்வித் துறை நிறைவேற்றுமா?

கம்ப்யூட்டர் சென்டரில் நடந்த குளறுபடி: அரசு பள்ளி இட ஒதுக்கீடை இழந்து சட்டக் கல்லூரி வாய்ப்பை தவறவிடும் ஏழை மாணவி! கனவை நிறைவேற்றுமா கல்வித்துறை?

சிறு தவறால் பறிபோகும் இட ஒதுக்கீடு: அரசுப் பள்ளி ஏழை மாணவி கனவை கல்வித் துறை நிறைவேற்றுமா?

தென்காசி மாவட்டம் பாப்பாங்குளம் அருகே உள்ள மயிலப்புரத்தை சேர்ந்தவர் மாடசாமி. தினக்கூலி அடிப்படையில் உள்ளூரில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிகிறார். இவரது மகள் பவானி, ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வி பயின்றார்.

பவானி கடந்த ஏப்ரலில் நடந்த பிளஸ் டூ தேர்வில் 600 க்கு 499 மதிப்பெண்கள் பெற்றார். இது 83.1% ஆகும். ஏழை மாணவியான பவானி அரசு பள்ளியில் பயின்று இவ்வளவு மார்க் எடுத்ததை ஊர் முழுக்க பாராட்டினார்கள். இவரது மதிப்பெண்ணை கேள்விப்பட்டு முன்னணி பொறியியல் கல்லூரிகள் இலவசமாக படிக்க வைப்பதாக அழைப்பு விடுத்தனர். சிலர் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத ஆலோசனை கொடுத்தனர்.

இதையும் படியுங்கள்: ஐ.ஐ.டி, எய்ம்ஸில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் படிப்புச் செலவை தமிழக அரசே ஏற்கும் – அரசாணை வெளியீடு

ஆனால் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு வழக்கறிஞர் ஆவதே தனது லட்சியம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்தார் பவானி. அங்கே தான் அந்தத் தவறு அரங்கேறியது… இவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்த கம்ப்யூட்டர் சென்டரில் இவர் அரசு பள்ளி மாணவி என்பதை குறிப்பிட மறந்து விட்டனர். அரசு பள்ளி மாணவியா என கேட்கப்பட்ட இடத்தில், ‘நோ’ என குறிப்பிட்டு விட்டார்கள். பவானியும் இதை கவனிக்கவில்லை.

கடந்த ஜூலை இறுதியுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிந்தது. அண்மையில் ரேங்க் லிஸ்ட் வந்த போது தான் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தான் இடம்பெறாததை பவானி கவனித்தார். பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஆன அவருக்கு கம்யூனிட்டி ரேங்க் 922 என்றும், பொதுவான ரேங்க் 2051 என்றும் வந்திருக்கிறது. இதுவே அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இவர் பெயர் சேர்ந்திருந்தால் நல்ல ரேங்க் கிடைத்திருக்கும். இதனால் இவரது சட்டப்படிப்பு கனவு அந்தரத்தில் நிற்கிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே முழு கல்வி கட்டணத்தையும் அரசு செலுத்துகிறது. எனவே இப்போது ஒருவேளை சட்டக் கல்லூரியில் இடம் கிடைத்தாலும் அரசின் கட்டண சலுகை கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பவானியால் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே அரசு பள்ளி இட ஒதுக்கீடு இல்லாமல் சட்டக் கல்லூரியில் பொதுவான ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தாலும் கூட படிக்கச் செல்வது இயலாத காரியம் என்கிறார்கள் பவானியின் குடும்பத்தினர். இதனால் பவானியின் ஓராண்டு கல்வியும் பறிபோகும் நிலையில் இருக்கிறது.

பவானியின் அண்ணன் கூலி விலை செய்பவர்தான். ஒரு தங்கை பார்வை குறைபாடு உடையவர். மற்றொரு தங்கை தற்போது பிளஸ் ஒன் படிக்கிறார். குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகும் கனவோடு இருந்தவருக்கு இது பேரிடி. சட்டக் கல்லூரி கவுன்சிலிங் தொடங்க இருக்கும் இந்த வேளையில் மாணவி பவானியை முறைப்படி அரசு பள்ளி இட ஒதுக்கீட்டில் இணைத்தால் அவரது கல்விக் கனவு நிறைவேறும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமும் தமிழக கல்வித்துறையும் ஆராயுமா? ஏழை மாணவிக்கு உதவுமா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tenkasi government school student request to change reservation type to tamilnadu law university