ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும் – என்சிடிஇ முக்கிய அறிவிப்பு

இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுதும் செல்லும்

By: October 21, 2020, 6:44:30 PM

இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ( NCTE ) தெரிவித்தது.  இந்த முடிவால், ஆசரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏழு வருடம் என்ற வரம்பைத் தாண்டி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைக்கும்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில் ஆசிரியராக வேண்டும் என்றால் கட்டாயம் தகுதி தேர்வில் தேர்சிப்பெற்றிருக்க வேண்டும். சிபிஎஸ்சி நடத்தும் தேர்வின் பெயர் சிடெட் (CTET) என்று அழைகப்படுகிறது. மாநில அரசு நடத்தும் தேர்வின் பெயர் டெட்(TET) என்றும் அழைக்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே  (சிடெட் – டெட்) சான்றிதழ் செல்லுபடியாகும் என்ற கால வரம்பு, தற்போது வாழ்நாள் முழுதும் செல்லும் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் கல்விக் குழுமம் விடுத்துள்ள செய்தியில், ” வரும் காலங்களில் ஆசிரயர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ், வாழ்நாள் முழுதும் செல்லும். எவ்வாறாயினும், ஏற்கெனவே தேர்ச்சி பெற்றோருக்கு,  சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ” என்று தெரிவித்தது.


ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும்
செல்லும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”

இந்தியா முழுவதும் இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப் படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழையும் நிரந்தரமாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு ஆகும்.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப் பட்டுள்ளது. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவு ஆகும். ஏற்கனவே தகுதித்தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களின் தகுதிக்காலத்தை வாழ்நாள் முழுவதற்கும் செல்லும் வகையில் நீட்டிப்பது குறித்து விரைவில் சட்ட ஆலோசனை பெறப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ள போதிலும், அது ஒரு நடைமுறை தான். அடுத்த ஒரு சில நாட்களில் அது தொடர்பாகவும் சாதகமான அறிவிப்பை தேசிய ஆசிரியர் கல்விக்குழு வெளியிடும் என்று நம்புகிறேன். இக் கோரிக்கையை பா.ம.க. தான் முதலில் எழுப்பியது என்பதில் மகிழ்ச்சி. இதற்காக ஆசிரியர் கல்விக்குழுவுக்கு நன்றிகள்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வழங்கப்படும் சான்றிதழின் தகுதிக்காலம் 7 ஆண்டுகள் ஆகும். ஆசிரியர் தகுதித்தேர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகளுக்குள் நிச்சயமாக வேலை கிடைத்து விடும் என்று நம்பப்பட்டது. அதைப்போலவே முதலில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் போதிய எண்ணிக்கையில் காலியிடங்கள் இல்லாத நிலையில் 2013&ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வேலை கிடைக்கவில்லை; அவர்களின் தகுதிச் சான்றிதழ் காலம் நடப்பாண்டில் முடிவடையவிருக்கும் நிலையில், ஆசிரியர் கல்விக்குழு எடுத்துள்ள இந்த முடிவு ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது என்பது உண்மை.

https://tamil.indianexpress.com/education-jobs/sengottaiyan-tamil-nadu-school-reopening-announcement-tet-exam-weightage-score-226588/

தமிழ்நாட்டில் மட்டும் 80,000 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணிக்காக காத்துள்ளனர். ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் காலத்தை வாழ்நாள் முழுவதும் நீட்டிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக்குழு முடிவெடுத்து அறிவித்தால், அது அவர்களுக்கு செய்யப்படும் பெரும் நன்மையாக இருக்கும். பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான தேசிய, மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் (NET/SET) வென்றோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் அவர்களின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். பிகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரச் சான்றிதழ்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. எனவே, ஏற்கனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதிச்சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை வாழ்நாள் முழுவதற்கு நீட்டிப்பதில் தவறு இல்லை. அதற்கான அறிவிப்பு விரைந்து வெளியிடப்பட வேண்டும்.
அதே நேரத்தில் ஆசிரியர் தகுதிச்சான்றிதழ் காலம் நீட்டிக்கப்படுவது மட்டுமே போதுமானதல்ல. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆசிரியர் பணிக்காக பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் அனைவரும் பயனடையும் வகையில் ஆசிரியர் நியமனங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும். ஆசிரியர், மாணவர் விகிதம் மாநில அளவில் கணக்கிடப் படுவதால் தான் ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் மாணவர் விகிதத்தை பள்ளி அளவில் கணக்கிடுவது தான் சரியானதாக இருக்கும். எனவே, பள்ளி அளவில் ஆசிரியர் மாணவர் விகிதத்தை கணக்கிட்டு, அதனடிப்படையில் புதிய பணியிடங்களை உருவாக்கி, அவற்றில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tet exam certificate validity for a lifetime tet exam news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X