பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெட் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஈரோட்டில் போராட்டத்தை தொடர இருப்பதாக அறிவித்துள்ளனர்.
'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டெட் தேர்வுக்குப் பிறகு வேலை வாய்ப்பைப் பெற நியமனத் தேர்வு எனப்படும் மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக ஏற்கனவே போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், நியமனத் தேர்வுக்கான அரசாணை ரத்து செய்யப்படும் என தி.மு.க. தேர்தல் அறிவிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததை அடுத்து, ஆசிரியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சம வேலைக்கு சம ஊதியம், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், டெட் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில், நியமனத் தேர்வுக்கான அரசாணையைப் பின்பற்றி போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு பள்ளிகளில் 2,222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் எனவும், இதற்கான ஆன்லைன் பதிவு நவம்பர் 1 ஆம் தேதி (நாளை) தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், டெட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். அந்த வகையில் இன்று காலை 8.30 மணிக்கு டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பேசினர். அமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தப் பேச்சு வார்த்தையின்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே, பணி நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதனை டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட போட்டித்தேர்வு அறிவிப்பிற்கு தடை ஆணை பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், இன்று முதல் ஈரோட்டில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“