/indian-express-tamil/media/media_files/2025/06/01/zbyMvbtQv8t5xs0QFURT.jpg)
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது. குறிப்பாக, சென்னை பிரசிடென்சி கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி மற்றும் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட ஐந்து கல்லூரிகள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர்.
இது தொடர்பான தரவுகள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரசிடென்சி கல்லூரியில் உள்ள 2,380 இடங்களுக்கு 40,167 விண்ணப்பங்கள் வந்துள்ளன. நந்தனம் கல்லூரிக்கு 29,376 விண்ணப்பங்களும், அம்பேத்கர் கல்லூரிக்கு 29,275 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.
ஒட்டுமொத்தமாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை இணையதளம் மூலம் இதுவரை 1,87,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பாடப்பிரிவுகளில், பி.எஸ்சி கணினி அறிவியல் அதிக விண்ணப்பங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பி.ஏ. தமிழ், பி.காம், பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.எஸ்சி. வேதியியல் மற்றும் பி.ஏ. பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைவான விண்ணப்பங்களே வரும் நிலையில், பிரசிடென்சி கல்லூரிக்கு பி.எஸ்சி. வேதியியலுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. "பி.எஸ்சி. வேதியியலுக்கு இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொருளாதாரம், வரலாற்று ஆய்வுகள் மற்றும் அரசியல் அறிவியல் உள்ளிட்ட பி.ஏ. படிப்புகளுக்கும் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன" என்று பிரசிடென்சி கல்லூரியின் முதல்வர் ஆர். ராமன் தெரிவித்தார். இந்த ஆண்டு இரண்டாவது ஷிப்ட் தொடங்கி, சில பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதன் மூலம் கல்லூரி தனது மாணவர் சேர்க்கையை இரட்டிப்பாக்கியுள்ளது. மேலும், இந்த ஆண்டு பி.எஸ்சி கணினி அறிவியல் பாடப்பிரிவை கல்லூரி முதன்முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது.
நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பெறப்பட்ட 29,376 விண்ணப்பங்களில் 12,211 மாணவிகளிடமிருந்து வந்துள்ளன. "கடந்த ஆண்டுதான் அனைத்து இளங்கலைப் படிப்புகளிலும் மாணவிகளைச் சேர்க்க தொடங்கினோம். மாணவிகளிடமிருந்து வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அமோகமான வரவேற்பைக் காட்டுகிறது. இந்த ஆண்டு அனைத்து பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 30% இடங்களை மாணவிகளுக்கு ஒதுக்குவோம்" என்று நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் சி. ஜோதி வெங்கடேஸ்வரன் கூறினார்.
நகரின் மற்றொரு பிரபலமான அரசு கல்லூரியான குயின் மேரிஸ் கல்லூரிக்கு, 2,038 இடங்களுக்கு 23,018 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மேலும், பல கட்டங்களில் அதிகமான விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு அரசு கல்லூரி சேர்க்கைக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சேர்க்கை அட்டவணைப்படி, சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 2 அன்று தொடங்கி ஜூன் 14 வரை நடைபெறும். இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 16 அன்று தொடங்கும். அதே நேரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 30 அன்று தொடங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.