Exam Result | 12th Exam Mark | Tamil Nadu: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.
பொதுவாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார். ஆனால், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு தேர்வு முடிவை வெளியிட்டனர். மொத்தம் 94.56 சதவீதம் பேர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 ஆக அதிகரித்துள்ளது.
7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும் போலவே மாணவர்களை விட மாணவியர்களே 4.07 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்கள் 92.37 சதவீதமும், மாணவிகள் 96.44 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, மாணவர்களை முந்தி மாணவியர்கள் 4.07 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை: 7,60,606
மாணவியர்களின் எண்ணிக்கை : 4,08,440
மாணவர்களின் எண்ணிக்கை : 3,52,165
மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை : 1
தேர்ச்சி விவரங்கள்
தேர்ச்சி பெற்றவர்கள் : 7,19,196 (94.56%)
மாணவியர் 3,93,890 (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 3,25,305(92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர் 1 (100%) தேர்ச்சி அடைந்துள்ளனர்
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகள்: 91.32 சதவீதம் தேர்ச்சி. அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49 சதவீதம் தேர்ச்சி. தனியார் பள்ளிகள் 96.7 சதவீதம் தேர்ச்சி. 397 அரசுப் பள்ளிகளும், 2,478 தனியார் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2-ம் இடம் பெற்றுள்ளன. 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது. 90.47 சதவீதம் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடத்தை பிடித்துள்ளது.
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்
அறிவியல் பாடப் பிரிவுகள் - 96.35% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடப் பிரிவுகள்-92.46% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலைப் பிரிவுகள் - 85.67% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொழிற்பாடப் பிரிவுகள் - 85.85% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்
அறிவியல் பாடப் பிரிவில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் - 98.43%, வேதியியல் - 99.14%, உயிரியல் - 99.35%, கணிதம் - 98.57%, தாவரவியல்- 98.86% ஆகும். இதேபோல், கணினி அறிவியல் - 99.80%, வணிகவியல் - 97.77%, கணக்குப் பதிவியல் - 96.61% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாட வாரியாக 100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
தமிழ் - 35, ஆங்கிலம் - 7, இயற்பியல் - 633, வேதியியல் - 471, உயிரியல் - 652, கணிதம் - 2587, தாவரவியல் - 90, விலங்கியல் - 382, கணினி அறிவியல் - 6996, வணிகவியல் - 6142, கணக்குப் பதிவியல் - 1647, பொருளியல் - 3299, கணினிப் பயன்பாடுகள் - 2251, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 210 பேர் என மொத்தம் 26 ஆயிரத்து 352 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஏதேனும் ஒரு பாடத்தில் 100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை - 26, 362.
தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை - 5603. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 5161 (92.11%)
தேர்வு எழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை- 125. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 115 (92%)
மறுமதிப்பீடு மற்றும் மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், நாளை (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்ச்சி அடையாத மாணவர்களும் நாளை முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.