12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண்ணில் சந்தேகம், திருப்தி இல்லை என்றால் மறுகூட்டல், விடைத் தாள் நகல் பெற இன்று (மே 7) முதல் பள்ளிகள் முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகத்தில்
கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை 12-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.60 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மொத்தம் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.56 ஆக உயர்ந்தது. இது கடந்தாண்டை விட 0.53 சதவிகிதம் அதிகமாகும்.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 397 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சியை எட்டி சாதனைப் படைத்தன. மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம் 97.45% உடன் முதலிடம் பிடித்தது. 2வது இடத்தை 97.42 % உடன் ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டம் பிடித்தன.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் மறுகூட்டல், விடைத் தாள் நகல் பெற விரும்புபவர்கள் இன்று (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மதிப்பெண்ணில் சந்தேகம், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை, திருப்தி இல்லை என்றால் அதனை அறிய மறுகூட்டல், விடைத் தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம்.
இன்று மே 7 காலை 11 முதல் மே 11-ம் தேதி மாலை 5 மணி வரை விடைத்தாள் நகல் கோரியும், மறுமதிப்பீடு வேண்டியும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித் தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“