12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்: ராமநாதபுரம் கலெக்டர் நேரில் ஆய்வு
இன்று தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடந்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Ramanathapuram News in Tamil: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 7, 930 மாணவர்களும், 8,147 மாணவிகளும் என மொத்தம் 16,077 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 269 பேர் தனித்தேர்வர்களும், 88 பேர் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கிறார்கள். இத்தேர்வு 65 மையங்களில் நடைபெறுகின்றன.
Advertisment
தேர்வுப் பணிகளில் 1. 025 பேர் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு பணியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மேற்கொள்வார்கள். அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் போதிய குடிநீர் வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தடையின்றி மின்சாரம் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. அப்போது மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 'மாணவ - மாணவிகள் எவ்வித அச்சமின்றி தேர்வு எழுதி வெற்றி பெற்றிட வேண்டும்' என்று தெரிவித்தார. இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.நாராயண சர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil