க.சண்முகவடிவேல்
திமுக முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்மான அன்பில் பொய்யாமொழியின் 69-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழி திருவுருவப்படத்திற்கு இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கிராப்பட்டி அன்பு நகர் இல்லத்தில் அமைந்துள்ள அன்பில் பொய்யாமொழியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
திராவிட மாடல் அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்து 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டில் உறுதிமொழி ஆண்டாக கால் பதிக்கிறது. தமிழகம் முழுவதும் 1, 222 இடங்களில் சாதனை விளக்க, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாங்கள் அனைத்தும் செய்து முடிக்கவில்லை. செய்ய வேண்டியது நிறைய உள்ளது. சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரிடம் இருந்தும் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலாவதாக திருவெறும்பூர் தொகுதிக்கு உள்ளிட்ட பகுதியில் 3.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கப்படுவது எனக்கு பெருமை அளிக்கிறது. இந்த சாலையால் பொதுமக்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாவதாக கூறினார்கள். அதன் அடிப்படையில் தற்போது இந்த சாலை மேம்பாட்டுப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் நெடுஞ்சாலை பணிகளில் ரூ.13 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
இன்று +2 பொதுத்தேர்வு முடிவு (இன்னும் சற்று நேரத்தில்) வெளியாகிறது. மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகள் பற்றி கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரிய துறைகளை தேர்வு செய்து படிக்க, நான் முதல்வன் திட்டம் மூலம் அறிந்து பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்து சென்னைக்கு பறந்தார்.
இந்நிகழ்வில் மாநகரக் திமுக செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட மாநகர நிர்வாகிகள் என்.கோவிந்தராஜ், லீலா வேலு, செங்குட்டுவன், மூக்கன், குணசேகரன், சந்திரமோகன், பொன் செல்லையா, சரோஜினி, நூர்ஜகான், தமிழ்ச்செல்வன், மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட, மாநகர, நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் கழகங்களின் நிர்வாகிகள், செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்று +2 தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடுவதால் அதிகாலையே தமது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னைக்கு பறந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil