தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் (TNDGE) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே 8 ஆம் தேதி வெளியிடுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, பிளஸ் டூ தேர்வு முடிவுகளை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடுவார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் கிடைக்கும். 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் இருந்து தங்கள் மதிப்பெண் அட்டைகளைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.
12 ஆம் வகுப்பு 2025 தேர்வுகள் மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றன. 12 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7 முதல் 14 வரை நடத்தப்பட்டன.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?
மாணவர்கள் தங்கள் பள்ளிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் வழங்கப்பட்ட மொபைல் எண்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு பதிவு செய்யும்போது சமர்ப்பித்த மொபைல் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலானது, பல்வேறு பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் குறிப்பிடுகிறது. 12 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் பட்டியலைப் பெற, வாரியத்தால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத் தேர்வுகள் பற்றிய தகவல்கள் தேர்வுத்துறையால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படும்.
கடந்த ஆண்டு, தமிழ்நாடு தேர்வு துறை மே 6, 2024 அன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிவித்தது. கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22 வரை நடத்தப்பட்டன.
கடந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 94.56 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 2023 ஆம் ஆண்டில் 94.03 சதவீதத்திலிருந்து 94.56 சதவீதமாக சற்று அதிகரித்தது. கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 7,60,606 மாணவர்கள் தேர்வெழுதினர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 94.56 சதவீதமாக இருந்தது, இதில் ஆண்களை விட பெண்கள் அதிக மதிப்பெண் பெற்றனர். ஆண்கள் தேர்ச்சி சதவீதம் 92.37 சதவீதமாகவும், பெண்கள் தேர்ச்சி சதவீதம் 96.44 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 8,42,512 ஆக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 2020 ஆம் ஆண்டில் 7,79,931 மாணவர்களும், 2021 ஆம் ஆண்டில் 8,16,473 மாணவர்களும், 2022 ஆம் ஆண்டில் 8,06,277 மாணவர்களும், 2023 ஆம் ஆண்டில் 8,03,385 மாணவர்களும், 2024 ஆம் ஆண்டில் 7,60,606 மாணவர்களும் என சரிவுப் போக்கு காணப்பட்டது.