11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் தனிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வந்த கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு, இனி அனைத்து அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2021 – 22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்க்கல்விக்காக மொத்தமாக 5,478.19 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த பின் பேசிய நிதி அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், ” தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் தற்போது 49 சதவீதம் ஆகும். இது தேசிய சராசரி விகிதத்தை விட இரு மடங்கு அதிகமாகும். 2018-19 ஆம் ஆண்டின் பாலின சமநிலைக் குறியீடு 0.97 ஆக உள்ளது. பெண்களுக்கு சமமான பள்ளி வசதிகள் வழங்கப்பட்டுள்ளதை இது எடுத்துக்காட்டுகிறது. 2011-12 ஆம் ஆண்டு முதல், 37 இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 3 அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 21 பல்தொழில்நுட்பக் கல்லூரிகளையும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளையும் அரசு நிறுவியுள்ளது.
வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,577 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டண சலுகை ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக, 2020-21 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் 391.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்விக்காக மொத்தமாக 5,478.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், பள்ளி கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதற்காக 1ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடபுத்தகங்களை அரசு வழங்கியது. 12-ம் வகுப்பிறகு, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் 1,912 வீடியோ பாடங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனால் 4,20,624 மாணவர்கள் பயன் அடைந்தனர். 5,522 வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
அரசின் சார்பாக 10 இதர தனியார் தொலைக்காட்சிகளும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. மாணவர்களுக்கான பாடங்கள் பல்வேறு இணையதளங்களில் மின்னணு தொகுப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்தார்.
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மதிய சத்துணவுத் திட்டம் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 43,246 மதிய சத்துணவுக் கூடங்கள் வாயிலாக 40.09 இலட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,953.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 54,439 அங்கன்வாடி மையங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
6 மாதம் முதல் 6 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 33 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். வளர் இளம் பெண்களுக்கு அவர்களது ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்க பல்வகை உணவு வழங்கப்பட்டு வருகிறது
2 வயது முதல் 5 வயது வரையிலான 11.33 லட்சம் குழந்தைகளுக்கு சூடான கலவை சாதம் வழங்கப்படுகிறது. 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,634 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நேற்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.