நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தேர்தலுக்கு பின் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று கூறி வந்த நிலையில், ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று சுகாதாரத்துறை சார்பில் நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மே 3 அன்று தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. கொரோனா பரவலால் தேர்வை ஒத்தி வைக்க சில தனியார் பள்ளிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட அளவிலான திருப்புதல் தேர்வுகள் ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்க உள்ளது. செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், பொதுத் தேர்வுகள் தொடங்க நான்கு வாரங்கள் மட்டுமே உள்ளது. மே மாதத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதால், தேர்வுகளை அந்த நேரத்தில் நடத்துவது நல்லதல்ல. மேலும், கொரோனாவின் இரண்டாம் அலை இளைஞர்களை அதிகம் தாக்குகிறது. எனவே கொரோனா பாதிப்பு குறைந்த பின் ஜூன் மாதத்தில் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம்.
இந்நிலையில் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. ஒருவேளை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளை ஜூன் மாதத்தில் நடத்தினாலும் ஜே.இ.இ மற்றும் நீட் போன்ற தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக போதிய கால அவகாசம் உள்ளது. எனவே தேர்வை தள்ளிவைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என கல்வியாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
இருப்பினும் தேர்வுகளை ஒத்திவைப்பது இவ்வளவு நாட்கள் தேர்வுக்கு தயாரான மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஒருசில கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
தேர்தல் ஆணையம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களையும் தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளித்தது. தேர்தல் முடிந்த உடனே திருப்புதல் தேர்வுகளை நடத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். மேலும், தற்போது மாணவர்களின் வருகையும் குறைந்து வருகிறது. முதல் திருப்புதல் தேர்விற்கு முன் 95% வருகை இருந்தது. மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 வரை நடத்தப்பட்ட வகுப்புகளின் போது மாணவர்களின் வருகை 50% ஆக குறைந்துள்ளது என ஆசிரியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
ஒரு வேளை தேர்வு நடத்துவதாக இருந்தால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகள் அட்டவணைப்படி நடைபெற்று வருகின்றன என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil