தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 40,000 அரசுப் பணியிடங்களை வரும் ஆண்டில் நிரப்ப உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
மாநிலத்தில் உள்ள தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஆசிரியர் தேர்வு வாரியம். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 21866 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 78,882 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 40,000 பணியிடங்களை வரும் நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
அரசு அலுவலர்களுக்கு இந்தக் காப்பீடு உள்ளிட்ட சேவைகளை எதிர்வரும் 2025-26 ஆம் நிதியாண்டு முதல் வழங்கிட முன்வரும் வங்கிகளுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன், குறித்த காலத்திற்குள் இப்பயன்கள் அரசு அலுவலரின் குடும்பங்களுக்குக் கிடைத்திடுவதை தமிழ்நாடு அரசின் கருவூலத் துறை ஒருங்கிணைக்கும்.
150 வகையான அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு வங்கிகளில் கடன் பெற சலுகைகள் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு நாள்களுக்கு பணப்பலன் பெறும் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
கொரோனா பெருந்தொற்று பரவி இருந்த காலத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெருஞ்சுமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு அலுவலருக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அவற்றைக் கனிவுடன் பரிசீலித்து முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை, 01-04-2026 முதல் சரண் செய்து பணப்பலன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும். இதற்குரிய அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும். அரசு அலுவலர் நலன் காக்கும் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.