தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜூன் 25) செவ்வாய்க்கிழமை 3-வது நாளாக தொடங்கி நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவையில் தானாக முன்வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் மொத்தம் 17,595 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) மூலம் 19,260 காலிப்பணியிடங்களும், மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் 3,041 காலிப்பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 6,688 காலிப்பணியிடங்களும் ஜனவரி 2026-க்கு முன் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.
அத்துடன், சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் பிற முக்கிய துறைகளில் காலியாக உள்ள 30,219 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு 5,08,055 வேலை வாய்ப்புகளை தனது தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“