தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92,000 சேர்க்கை இடங்களுக்கு, இன்று மாலை 6 மணி முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்குகிறது.
Advertisment
மேலும், தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 51 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக்குகள்) இயங்கி வருகின்றது. தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகளையும் சேர்த்து மொத்த ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 16,890. இதற்கு தோராயமாக 30,000 மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்யும் நடைமுறைக்கு பதிலாக, முதல்வரின் உத்தரவின்படி புதிய முயற்சியாக ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இஞ்ஜினியரிங் , மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மட்டுமே இதுவரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி இருந்துவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
TNGASA 2020 ஆன்லைன் செயல்முறை மூலம், விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல்,விருப்பமான கல்லூாிகள் மற்றும் பாடப் பிரிவுகளை பதிவு செய்தல், பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தல் மற்றும் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தல் ஆகிய அனைத்தும் இணைய வழியாக நடத்தப்படும்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வரும் 31 ஆம் தேதிவரை www.tngasa.in, www.tndceonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் www.tngtpc.com என்ற இணையதளத்தில் வரும் 31 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையின் முன்னணி கல்லூரியான லயோலா கல்லூரி, மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் முழுவதையும் ஆன்லைன் முறையில் மாற்றியமைக்கப்பட்டதாக அதன் கல்லூரி முதல்வர் தாமஸ் அமிர்தம் தெரிவித்தார். அவர் கூறியதாவது, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முறையின் அடிப்படையிலேயே தங்கள் கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. ஆனால், இந்தாண்டு இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும், நேர்காணலுக்கும் அவர்கள் கல்லூரி வரத்தேவையில்லை. ஆன்லைனிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாணவர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்களை டிஜிலாக்கரில் சேகரிக்க அவர்களை கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின்னர், நேர்காணல், Google Meet போன்ற செயலியின் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" எட்ன்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil