கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா : தமிழக அரசு அறிவிப்பு

TN Govt announces Free 2gb data cards For College Students : சிறந்த முறையில் கல்வி கற்றிட  வழங்கப்படும் விலையில்லா அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டும்

By: January 10, 2021, 10:19:43 AM

TN Govt announces Free 2gb data cards For College Students :  ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம். எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க  தமிழக முதல்வர்  உத்தரவிட்டார்.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சேவை சார்ந்த நிறுவனங்களை உருவாக்குதல், அரசு துறைகளுக்கு வன்பொருள் கொள்முதல் செய்தல், மின்னாளுமை மற்றும் வன்பொருள் சேவைகள் ஆகியவற்றுக்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகியன தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் (எல்காட்) முதன்மையான பணிகளாகும்.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கநிலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் மட்டும் நடைபெறத் தொடங்கியது.

மேலும், 2020-2021 கல்வியாண்டில் மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவிட்- 19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.  இந்த இணைய வழி வகுப்புகளில் மாணக்கர்கள் கலந்து கொள்ள ஏதுவாக,  அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9, 69,047 மாணக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா தரவு அட்டைகள் வழங்கப்படும்.

இந்த கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட  வழங்கப்படும் விலையில்லா அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே, இங்கிலாந்தில் தோன்றிய புதிய கொரோனா நோய் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. எனவே, தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வரை கல்லூரிகள் செயல்பட அனுமதி மறுக்கப்படுமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், 2500 பொங்கல் பரிசு, மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா என அடுத்தடுத்து திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. எவ்வாறாயினும், இத்தகைய திட்டங்கள் பொது முடக்கநிலை கடுமையாக அமலில் இருந்த காலத்தில் (ஏப்ரல், ஜூன் காலங்களில்) அறிவிக்கப்பட்டிருந்தால் பாமர மக்களின் துயரங்கள்  பெருமளவில் போக்கப்பட்டிருக்கும் என்பதும்  நிதர்சனம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tn govt announce free 2gb data free data cards for online courses for college students

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X