தமிழ் வழியில் படித்தவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், கொரோனா காரணமாக பெற்றோரை இழந்தவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதற்கான அரசாணையை (GO) தமிழக அரசு வெளியிட்டது.
அந்த உத்தரவின்படி, 1970 முதல் நடைமுறையில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் நடைமுறை 51 ஆண்டுகளுக்குப் பின்னர் மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையின்படி, இனி வேலை வாய்ப்புகளில் கொரோனா காரணமாக பெற்றோரை இழந்து வாடும் இளையோர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு அல்லது தனியாரால் நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கி பயின்று, வளர்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த வாரிசுதாரர்கள், அந்த இல்லங்களில் இருந்து பெறப்படும் சான்றிதழின் அடிப்படையில் பணிகளில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அங்கீகரிக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் சேர முடியாத கிராமப்புற தாய் மற்றும் தந்தையை இழந்தவர்கள், வருவாய் வட்டாட்சியர் மூலம் பெறப்படும் சான்றிதழ் அடிப்படையில், முன்னுரிமை பெற தகுதி உடையவர்கள் என தமிழக அரசு கூறியுள்ளது.
அடுத்தபடியாக, முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு 2வது மற்றும் 3வது முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அடுத்ததாக, போரில் உடல் தகுதி இழந்த முன்னாள் ராணுவத்தினர், வீரமரணம் அடைந்த ராணுவத்தினரின் வாரிசுகள், ஆதரவற்ற விதவைகள், கலப்பு திருமண வாரிசுகள் உள்ளிட்ட வழக்கமான வரிசைப்படி வேலைவாய்ப்பு முன்னுரிமை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரசு வேலைகளில் முன்னுரிமை அல்லாத பிரிவினருக்கு 1:4 என்ற வரிசையில் முன்னுரிமை இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil