அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் திட்டத்தில் இருந்து விலகுவதாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி), இந்தியாவின் 10 அரசு மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்களை உலகத்தரமிக்க கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற்றுவதற்கு ”உயர்தர சிறப்புக் கல்வி நிறுவனங்கள்” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் உயர்கல்வி நிறுவனங்களை அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த 500 கல்வி நிறுவனங்களுக்குள்ளும், அதனைத்தொடர்ந்து சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்குள்ளும் கொண்டு வருவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
தேர்ந்தெடுக்கப்படும் அரசு உயர்தர சிறப்புக் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 1000 கோடி நிதியுதவி வழங்கப்படும். இருப்பினும், அண்ணா பல்கலைக்கழகம் விசயத்தில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநில அரசு 50% நிதியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மீதமுள்ள 50% நிதியை மத்திய அரசு பகிர்ந்து கொள்ளும் என்றும் பலகலைக் கழக மானியக் குழு தெரிவித்தது.
இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா எமினென்ஸ் இன்ஸ்டிடியூட், தனியார் பொறியியல் கல்லூரிகளை இணைக்கும் அண்ணா பல்கலைக்கழகம் என இரண்டாக பிரிக்கவும், அண்ணா பல்கலைக்கழகம் சட்டம், 1978 திருத்தம் செய்யவும் ஏற்ற பரிந்துரைகளை அளிக்க தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. பரிந்துரை குழு இன்னும் தனது அறிக்கையை சமர்பிக்க வில்லை .
இந்நிலையில், “ஐந்தாண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் தானாகவே 1500 கோடி ரூபாய் நிதியைத் திரட்டிக் கொள்ள முடியும். ஆகவே, உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்” என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சூரப்பாவின் இந்த கடிதம் தமிழக அரசியிலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சூரப்பாவின் முடிவின் படி, அண்ணா பல்கலைக் கலகத்திற்கு அரசின் நிதி பங்கீடு இல்லாமல் போகும். நிதி பங்கீடு மாநில அரசு தராமல் இருந்தால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தே அண்ணா பல்கலைக் கழகம் விலகி, உயர் கல்வி உயர் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் வந்துவிடும்”என்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டின.
இந்நிலையில், தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், " அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் உள்ளது. பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா கூறும் ஆலோசனைகள் ஏற்புடையதாக இல்லை. பல்கலைக்கழகமே தேவையான நிதியைத் தானே சுயமாக திரட்டிக் கொள்ள இயலாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, தமிழகத்தில் உள்ள 69% இடஒதுக்கீட்டை தொடர வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசிடம் இருந்து முறையான எந்த ஒரு பதிலும் இல்லை என்று மாநில அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.உயர்தர சிறப்புக் கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டால் தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.