தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் கீழ் நடப்பாண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஆக.19) வெளியிடப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
தமிழகத்தில் இந்தாண்டு 1,52,920 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 89,198 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
பட்டியலை வெளியிட்டு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த ஆண்டை விட தற்போது 150 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அன்னை மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களும், கன்னியாகுமரியில் உள்ள மெடிக்கல் மிஷன் அண்ட் ரிசர்ச் செண்டர் கல்லூரியில் 100 மாணவர்களும் என மொத்தம் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளது
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன என்றார்.
தொடர்ந்து, நாமக்கலைச் சேர்ந்த ரஜினிஷ் என்ற மாணவன் 720 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் ரூபிகா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்" என்று அவர் கூறினார்.
இப்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு கடந்த 14-ம் தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வருகிற 21-ம் தேதி மருத்துவத் தேர்வுக்குழு மூலமாக முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கிய உடனேயே 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு, முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு பட்டியல், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22, 23 ஆகிய நாட்களில் நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, பொதுக் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“