Tnpsc | thangam-thennarasu: தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 பணியிடங்கள் 121, குரூப் 2ஏ பணியிடங்கள் 5,097 உள்ளிட்டவற்றை நிரப்புவதற்கான முதன்மை தோ்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. மொத்தமாக 52,00 பேர் தேர்வுகளை எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 9 மாதங்களாகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இழுத்தடிப்பு
இந்நிலையில், இது தொடர்பாக கடந்த மாத தொடக்கத்தில் விளக்கம் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, '80 விழுக்காட்டிற்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், எஞ்சியுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6,000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
ஆனால், இந்த மாதத்தில் 15 கடந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் நிலவி வருவது தேர்வாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட்டால்தான் அடுத்ததாக அரசுப் பணியில் சேர முடியும் என்கிற சூழலும் நிலவி வருகிறது.
கேள்வி
இதனிடையே, 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த 9 மாதங்களா? என்று கேள்வி எழுப்பிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தேர்வுகளை நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதில் டி.என்.பி.எஸ்.சி செயல்தன்மை இன்றி நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினார். மேலும், தேர்வுகள் நடைபெற்ற 6 மாதங்களில் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
ரிசல்ட் எப்போது?
இந்த நிலையில், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளிவரும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமம் ஏற்பட்டுள்ளது ஏன்? என்பது தொடர்பான அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி இன்று மாலைக்குள் வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கலாம் என்கிற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“