தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும், பள்ளி இறுதி வேலை நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழி காட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018 முதல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு 2024-25 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை கடந்த ஜூன் 8-ம் தேதி வெளியிட்டது. அந்த நாட்காட்டியில், 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த கல்வியாண்டில் 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
220 நாட்கள் பள்ளி வேலை நாட்கள், 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பு ஆசிரியர்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்கும், அதனால் வேலை நாட்களைக் குறைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கையை 210 நாட்களாகக் குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 19 சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருந்ததை மாற்றி 4 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 2 சனிக்கிழமைகளில் வகுப்புகள் முடிந்து விட்டது. இதனால், இன்னும் 2 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் நடைபெற வேண்டும்.
மேலும், பழைய நாட்காட்டியில்ல் பள்ளி இறுதி வேலை நாள் ஏப்ரல் 25-ந்தேதியாக இருந்தது. அது தற்போது ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“