TN School education dept said board exam question papers under CCTV surveillance: தமிழகத்தில் பள்ளி பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்படும் அறைகள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் லீக் ஆகி அதிர்ச்சியை அளித்தது. பள்ளிக்கல்வித்துறையின், வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, முதன்மைக் கல்வி அலுவலர் ஒருவர், முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்களை நேரடியாக பள்ளிகளுக்கு விநியோகம் செய்துள்ளார். அந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வினாத்தாள்களை கசியவிட்டனர். மேலும், இரண்டாவது திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாளும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி அளித்தது.
இதனைத்தொடர்ந்து, பொதுத் தேர்வு வினாத்தாள்களின் பாதுகாப்பிற்கு பள்ளிக் கல்வித்துறை முன்னுரிமை அளித்துள்ளது. அதன்படி வினாத்தாள்கள் வைக்கப்படும் ஸ்ட்ராங் அறைகள் 24X7 சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ட்ராங் அறைகளுக்கு அருகில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஸ்ட்ராங் ரூம்களுக்குள் நுழையும் நபர்களின் விவரங்களை கொண்ட பதிவுப் புத்தகத்தை பராமரிக்குமாறு பாதுகாவலர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்” என்றார்.
மேலும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மே 5ம் தேதி துவங்க உள்ளது. தேர்வு நாளில், வழித்தட அலுவலர்கள் இந்த வலுவான அறைகளில் இருந்து வினாத்தாள்களை எடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிகளுக்கு வழங்குவார்கள். என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இதையும் படியுங்கள்: கணினி நிரல் மன்றம், சதுரங்கப் போட்டி, மாணவர்களுக்கென இதழ்கள்.. அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
”கடந்த ஆண்டுகளிலும் இதுபோன்ற சில அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த விதிகளை புத்தகத்தில் பின்பற்றுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே, கண்காணிப்பு மற்றும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்படுவார்கள். ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில், தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும்,” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அரசு தேர்வுகள் இயக்குனரகம் வினாத்தாள்கள் கசிவு இல்லாமல் பொதுத் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. பொதுத் தேர்வு நன்கு நிறுவப்பட்ட நடைமுறைகளைக் கொண்டுள்ளது. எனவே, எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வோடு பொதுத் தேர்வை ஒப்பிட முடியாது, என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil