தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 6 ஆம் தேதியும் 10 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பள்ளிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்கிற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்தது.
மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில், ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியது. ஆனால், 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. இந்த சூழலில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்பட உள்ளது. அதன்படி, ஜூன் 6 ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 10 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இந்த தகவல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை எனவும், ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“