தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜுன் 10) திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி இந்தாண்டு முழு ஆண்டுத் தேர்வுகள், பொதுத் தேர்வுகள் வழக்கத்தை விட முன்கூட்டியே முடிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்த மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், ஜுன் 6-ம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடுமையான வெப்பம் காரணமாக பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி நாளை (ஜுன் 10) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.
வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள் நாளையே வழங்கப்படவுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“