க.சண்முகவடிவேல்
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி 91.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதிய நிலையில், 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.39, இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,30,710. மாணவர்களின் எண்ணிக்கை 4,04,904, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.66. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.16. மாணவர்களை விட மாணவியர்கள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருச்சி, லால்குடி, முசிறி உள்ளிட்ட 3 கல்வி மாவட்டங்களில் 449 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என 172 மையங்களில் 16,737 மாணவர்களும், 17,032 மாணவிகளும் என மொத்தம் 33,769 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வினை எழுதினர்.
இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தில் 94.28 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 15,325 மாணவர்களும் 16 ஆயிரத்து 513 மாணவிகளும் என மொத்தம் 31,838 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.28 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.03 சதவீதம் அதிகமாகும்.

இதில் 52 அரசு பள்ளிகள், 8 ஆதிதிராவிட நலப் பள்ளிகள், 3 பழங்குடியினர் நலப் பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 64 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 144 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அந்தவகையில், திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பில் தொடர்ந்து 10 வருடமாக 100% தேர்ச்சியை கொடுத்துள்ளது. 11-வது வருடமான 2023-ல் ஆங்கில பிரிவில் 100%, தமிழ் பிரிவில் 98% சதவிதம் பெற்று சாதனை படைத்துள்ளனர் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்.
திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான உயர்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் (418) எடுத்த மாணவி மீரா ஜாஸ்மின்யிற்கு பள்ளி தலைமையாசிரியை எழிலரசியும், வகுப்பு ஆசிரியை ஆர்.சந்திராதேவியும் இனிப்பு வழங்கி பாராட்டினர். இதனை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி, ஆசிரியர்கள் ஆர்.சந்திராதேவி, வினோதினி, நர்மதாரீனா, ராணி, மோச்சராணி, அருணா மற்றும் மாணவ மாணவிகளுக்கு
மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோ மற்றும் நிர்வாகிகள் பாராட்டி, இனிப்புகள் வழங்கினர்.
மக்கள் சக்தி இயக்கம் சார்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் தங்களது மொபைல் போன்களில் தங்கள் தேர்ச்சியையும், பெற்ற மதிப்பெண்களையும் பார்த்து உற்சாகமடைந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil