Tamilnadu-school-education: ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 1,500 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல்கட்டமாக 1,000 இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நியமனம் செய்து கொள்ள தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இடைநிலை வகுப்பு ஆசிரியர்களை பணியமர்த்துதல், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
“தேர்வுக்குப் பிறகு, அரசு அடையாளம் காட்டிய முன்னுரிமை மாவட்டங்களில் 5 ஆண்டுகள் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். பணி நியமன ஆணையில் இந்த நிபந்தனை குறிப்பிடப்பட வேண்டும்” என்று பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜே.குமரகுருபரன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் உள்ளதால், திருவண்ணாமலை, தர்மபுரி போன்ற வடமாவட்டங்களை முன்னுரிமை மாவட்டங்களாக மாநில அரசு முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“