TNDTE Diploma February Results 2020-21 declared : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்லூரிகள் இயங்காததால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்ததால், செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கும் ஆன்லைன் முறை மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் இந்த தேர்வுகள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் அறிவுறுத்தலின் பேரில், முதலாம், மூன்றாம், மற்றும், 5-ம் செமஸ்டர்களுக்கான நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நடத்தப்பட்ட தேர்வை 2,28,441 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற அரசின் இணைய தளத்தில் பார்க்கலாம். தேர்வெழுதியவரக்ளில், 2,09,338 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாகவும், தேர்ச்சி விகிதம் 91.63 சதவீதம் என்றும் தேர்வு முடிவுகள் மூலம் தெரிய வருகிறது. தேர்வெழுதியவர்களில் 18,529 மாணவர்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும் ஜீன், ஜீலை மாதங்களில் நடைபெற உள்ள அரியர் தேர்வுகளை எழுதலாம் எனவும், இதற்கான கட்டணத்தை வரும் 4-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் செலுத்தலாம் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு கல்வியாண்டுக்கான 2-ம், 4-ம், மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் வரும் 14-ம் தேதி முதல் ஜீலை 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil