பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணபித்த 1,31,436 பேருக்கான ரேண்டம் எண்கள் (சமவாய்ப்பு எண்கள்) உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டார்.
தமிழகத்தில், 2020 ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, ஜூலை 15-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி நிறைவு பெற்றது. இதில், 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், ஒரே மதிப்பெண் பெற்றவர்களை வரிசைப்படுத்துவதற்கான ரேண்டம் எண்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அது என்ன ரேண்டம் எண்?
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,"பொறியியல் கலந்தாய்வில், ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் ரேண்டம் எண் முறை பின்பற்றப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையில், ரேண்டம் எண் அதிகமாக உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக, கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே ரேண்டம் எண்கள் அந்தந்த மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ரேண்டம் எண் செயல்முறையை தொடங்குவதற்கு முன், கணிதம்,வேதியியல், விருப்பப் பாடங்கள், பிறந்த தேதி போன்றவைகள் மூலம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் ரேண்டம் எண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில், இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம், 500க்கும் மேற்பட்ட பொறியியில் கல்லூரிகளில் உள்ள 2.64 லட்சம் இடங்ககள் நிரப்பப்படவுள்ளன. தற்போது, விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,333 ஆக உள்ளது. இருப்பினும், விண்ணப்பித்தவர்களில் 30,215 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தாமல் கலந்தாய்வு செயல்முறையில் இருந்து விலகியுள்ளனர்.
மேலும், விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய 1,28,118 பேரில், சுமார் 14 ஆயிரம் பேர் சான்றிதழை பதிவேற்றம் செய்யாமல் கலந்தாய்வில் இருந்து விலகி உள்ளனர். சான்றிதழ் பதிவேற்ற முறை ஆகஸ்ட் 24ம் தேதியோடு நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், தமிழகத்தில் இந்த வருடம் 1. 50 லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் இடங்கள் நிரப்பப்படாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil