தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்னும் 55,000 இடங்கள் காலியாக உள்ளது. மேலும், 14 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. முதலில் சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டது. பின்னர் பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. தற்போது நான்கு சுற்று கலந்தாய்வுகள் முடிவு பெற்றுள்ளன.
இந்தநிலையில், தமிழகத்தில் 55,000 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளதாக கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், TNEA 2022 4வது சுற்று கல்வி கவுன்சிலிங்கின் முடிவில் 55,846 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. 14 கல்லூரிகளில் ஒரு இடத்தைக் கூட நிரப்ப முடியவில்லை. மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், 6 அரசு நிறுவனங்களால் 50% இடங்களைக் கூட நிரப்ப முடியவில்லை. 66 கல்லூரிகள் 90%க்கு மேல் நிரம்பியுள்ளன. தரமான கல்வி தரும் கல்லூரிகள் நிலைத்து நிற்கும், எனப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே தற்போது துணைக் கலந்தாய்வுக்கான செயல்முறை தொடங்கியுள்ளது. இருப்பினும் இதில் குறைவான இடங்களே நிரம்பும் என்பதால், இந்த ஆண்டும் பல்வேறு கல்லூரிகளில் அதிகமான காலி இடங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil