பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், 102 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில், திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி நேத்ரா முதல் இடமும், தருமபுரியைச் சேர்ந்த ஹரிணி 2-வது இடமும், திருச்சியைச் சேர்ந்த ரோஷினி பானு 3-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகி்ன்றன. இவற்றில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும்.
இதையும் படியுங்கள்: TNEA Cut Off: சரிந்து உயரும் பொறியியல் கட் ஆஃப்; யாருக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?
இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ, பி.டெக் படிப்புகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (Single Window System) பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. ஆன்லைன் வழியிலான இக்கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில் (2023-2024) பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 4-ம் தேதி தொடங்கி, ஜுன் 4-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் பதிவு செய்தனர்.
ஆனால், அவர்களில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 பேர்தான் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களின் சான்றிதழ்கள் ஜுன் 5 முதல் 20-ம் தேதி வரை ஆன்லைனிலேயே சரிபார்க்கப்பட்டன. இதில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜுன் 26-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி வெளியிட்டார். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் தரவரிசையை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இதன்படி 102 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி நேத்ரா முதல் இடமும், தருமபுரியைச் சேர்ந்த ஹரிணி 2வது இடமும், திருச்சியைச் சேர்ந்த ரோஷினி பானு 3-வது இடமும் பிடித்துள்ளனர்.
1. நேத்ரா – சிறுதொண்டநல்லூர், தூத்துக்குடி
2. ஹரிணி – ஜடயம்பட்டி, தருமபுரி
3. ரோஷினி பானு – மேலவாடி, திருச்சி
4. கௌரிசங்கர் – பெத்தாம்பட்டி, சேலம்
5. சாந்தகுமார் – தருமபுரி
6. ராஜேஷ் – சடையம்பாளையம், கரூர்
7. பிரேம் பாலாஜி – பூலுவபட்டி, திருப்பூர்
8. தனிஷா ஸ்ரீராம் – சென்னை
9. ரிதிகா – திருமங்கலகோட்டை, தஞ்சாவூர்
10. ஷிவானி – மேலணிக்குழி – அரியலூர்
அரசு பள்ளியில் படித்து பொறியியல் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடம் பிடித்த மாணவர்கள்:
1. மஹாலக்ஷ்மி – தர்மபுரி
2. நிவேதிதா – நாகப்பட்டினம்
3. சரவணக்குமார் – பொள்ளாச்சி
4. அழகேசன் – தர்மபுரி
5. மஹாஸ்வேதா – திருப்பூர்
6. நாதிஷ் – கோயம்புத்தூர்
7. தாரிக் அஸீஸ் – மேட்டுப்பாளையம்
8. பவித்ரா – நாமக்கல்
9. தீபக் - கொண்டப்பநாயக்கன்பாளையம்,
10. ஐகோர்ட் சின்னத்துரை – நல்லூர்
பொறியியல் தரவரிசைப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்த திருச்சி மாணவி ரோஷினி பானுவை நாம் தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்ததாவது; நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் தான், எங்க அப்பா பொன்மலை ரயில்வே ஒர்க்ஸ் ஷாப்ல சீனியர் டெக்னிசியனா இருக்கார்.
நாங்க லால்குடி அருகே உள்ள மேலவாளாடி பகுதியில் வசித்து வருகின்றோம். நான் திருவெறும்பூர் அருகே வேங்கூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தேன். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 597 மதிப்பெண் எடுத்தேன். எனது கட் ஆஃப் 200-க்கு 200, அதன்படி, பொறியியல் தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் நான் 3-ம் இடம் பிடித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.
ஆரம்பத்தில் இருந்தே பொதுத்தேர்வை எழுதுவதற்கு ஏற்றாற்போல் நல்லா, ஆர்வத்துடன் படிச்சேன். எனக்கு பள்ளியிலேயும் கூடுதலா கவனம் செலுத்தி நல்லாவே பயிற்சி கொடுத்தாங்க. அதிலும் கணிதம் எனக்கு பிடித்த பாடம், அதில் நூறுக்கு நூறு எடுத்திருக்கேன்.
இப்போ வந்திருக்கும் தரவரிசைப் பட்டியலின்படி, நான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரலாம் என நினைச்சிருக்கேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் (CSE) பாடப்பிரிவினை தேர்வு செய்ய விரும்புகின்றேன் என்றார் மகிழ்ச்சியாக. நாமும் நம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil