தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி முதல் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த கலந்தாய்வை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கியது.
இதையும் படியுங்கள்: அண்ணா பல்கலை. செமஸ்டர் ரிசல்ட் வெளியீடு; செக் செய்வது எப்படி?
விண்ணப்பப்பதிவு ஜூன் 4 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், பொறியியல் கலந்தாய்விற்கு 1,78,959 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் நம்பர் ஜூன் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் தரவரிசை ஜூன் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கவுன்சிலிங் ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் கவுன்சலிங் தாமதமானதை அடுத்து, பொறியியல் கவுன்சலிங் தள்ளிவைக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி முதல் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும் கவுன்சிலிங்கிற்கான அட்டவணையையும் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் அமைச்சர் வெளியிட்டார்.
கவுன்சிலிங் அட்டவணை
அதன்படி, ஜூலை 22 ஆம் தேதி முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 23 வரையிலும், மற்ற சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 24 முதல் ஜூலை 26 வரையிலும் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை முதல் சுற்று பொது கலந்தாய்வு நடைபெறும்.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை இரண்டாம் சுற்று பொது கலந்தாய்வு நடைபெறும்.
அடுத்ததாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை 3 ஆம் சுற்று பொது கலந்தாய்வு நடைபெறும்.
அட்டவணையை வெளியிட்டு அமைச்சர் பொன்முடி கூறியதாவது, வழக்கமாக 4 சுற்றுகளாக நடத்தப்படும் பொறியியல் கலந்தாய்வு, இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்பே முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 11,804 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 430 பொறியியல் கல்லூரிகளில் 1.57 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 3,100 பொறியியல் இடங்கள் கூடுதலாக உள்ளன. காலியிடங்கள் இல்லாத அளவிற்கு அனைத்து இடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
(ECE Advanced Technology, ECE Design and Technology) ஆகிய 2 புதிய படிப்புகள் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டு வேறு படிப்புக்கு கல்லூரி மாறினால் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.