தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்கின் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்றுக்கு எந்தெந்த டாப் கல்லூரிகளில் இடங்கள் உள்ளன, முதல் சுற்றில் அதிகம் விரும்பப்பட்ட கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்து, தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கவுன்சலிங்கில் 442 கல்லூரிகள் பங்கேற்கின்றன. அவற்றில் 1,59,542 இடங்கள் உள்ளன. இதில் முதல் சுற்றில் 14,227 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: TNEA: பொறியியல் கவுன்சலிங் முதல் சுற்று முடிவில் 10% இடங்களே நிரம்பின; இந்த ஆண்டும் காலியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு
கடந்த ஆண்டைப் போலவே கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு அதிக ஆர்வம் உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் மிகுந்த விருப்பத்துடன் தேர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 80 மாணவர்களில் 42 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.
இந்தநிலையில், டாப் கல்லூரிகளில் இன்னும் நிறைய இடங்கள் உள்ளன. இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கல்வியாளர் சுரேஷ் சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் வீடியோவில், டாப் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, இ.சி.இ போன்ற படிப்புகளை தவிர, மற்ற டாப் கோர்ஸ்களில் இன்னும் இடங்கள் உள்ளன. ரவுண்ட் 2 கவுன்சிலிங்கில் கலந்துக் கொள்பவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கல்லூரிகளில், சென்னை காலவாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் முதல் சுற்றில் 92.51% இடங்கள் நிரம்பியுள்ளன. தன்னாட்சி பெற்ற தனியார் கல்லூரியான எஸ்.எஸ்.என் கல்லூரியில் உள்ள 523 இடங்களில் தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உட்பட மொத்தம் 484 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) காரைக்குடி 90% இடங்கள் நிரம்பியுள்ள இரண்டாவது நிறுவனம் ஆகும்.
அடுத்தப்படியாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியான மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 89.57% இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 652 இடங்களில் 588 இடங்கள் பொது கலந்தாய்வில் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 52 இடங்களில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொழிற்கல்வி பிரிவில் உள்ள அனைத்து 15 இடங்களும் நிரம்பிவிட்டன.
அடுத்ததாக, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் மொத்தம் உள்ள 939 இடங்களில் 839 இடங்கள், அதாவது 89.05% நிரப்பப்பட்டுள்ளன. தற்போது 113 இடங்கள் காலியாக உள்ளன.
சென்னை குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 84.53% இடங்கள் நிரம்பியுள்ளன.
கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி போன்ற கல்லூரிகளில் 80% இடங்கள் நிரம்பியுள்ளன.
கடந்த ஆண்டு அறிமுகமான, தன்னாட்சி அல்லாத சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் நிறுவனத்தில், 74.46% இடங்கள் நிரம்பியுள்ளன.
ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, லயோலா ஐகேம் ஆகிய கல்லூரிகளில் சுமார் 60% இடங்கள் நிரம்பியுள்ளன.
ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங், ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் காலேஜ் ஆகிய கல்லூரிகளில் சுமார் 50% இடங்கள் நிரம்பியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.