தமிழகத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் 2024-25 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான படிப்புகளில் 22,248 இடங்களைச் சேர்த்திருப்பதால் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 2.1 லட்சமாக இருந்த மொத்த இடங்கள் இந்த ஆண்டு 2.3 லட்சமாக அதிகரித்துள்ளது என TOI செய்தி வெளியிட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவதற்கு விண்ணப்பித்த 476 கல்லூரிகளில், 223 கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக ஆய்வு நடத்தியது. 50 கல்லூரிகளுக்கு, ஆன்லைன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தநிலையில், ”நல்ல உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரிய உறுப்பினர்களுடன் செயல்படும் கல்லூரிகள் மட்டுமே தங்கள் சேர்க்கையை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டன. இதன் மூலம் அதிக மாணவர்கள் நல்ல கல்லூரிகளில் சேர முடியும்,” என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறினார்.
மேலும், “உள்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த கல்லூரிகள் நிபந்தனைகளை பூர்த்தி செய்ததா என்பதை சரிபார்க்க மீண்டும் ஆய்வு செய்யப்படும்” என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார்.
பொறியியல் கல்லூரிகள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் ஆகியவற்றில் இடங்களை சேர்க்கத் தொடங்கியுள்ளன. இந்தப் படிப்புகளில் தமிழகக் கல்லூரிகள் 1,147 இடங்களைச் சேர்த்துள்ளன. “சிப் தயாரிப்பு மற்றும் உற்பத்திக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தத் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து, கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன,” என்று துணைவேந்தர் கூறினார்.
2024-25 ஆம் ஆண்டு முதல் எலக்ட்ரிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் இளங்கலை வடிவமைப்பு படிப்புகளை தொடங்கவும் அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே, ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) 2024-25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஒரு துறையில் அதிகபட்ச இடங்களுக்கான வரம்பை நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு வரை, கல்லூரிகள் ஒரு துறையில் அதிகபட்சமாக 240 மாணவர்களை சேர்க்கலாம் என்று இருந்தது.
இதனையடுத்து, மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கம்ப்யூட்டர் தொடர்பான பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை 15% வரை உயர்த்தியுள்ளதாக தமிழகத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளில் 22,248 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,19,229 ஆக உள்ளது. இ.சி.இ, இ.இ.இ, இ & ஐ ஆகிய பாடப்பிரிவுகளில் 1,147 இடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்த இடங்களின் எண்ணிக்கை 53,940 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம், சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் 2,965 இடங்கள் குறைக்கப்பட்டு, மொத்த இடங்களின் எண்ணிக்கை 57,467 ஆக குறைந்துள்ளது. ஆர்க்கிடெக்சர் படிப்பில் 390 இடங்கள் குறைக்கப்பட்டு மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,740 ஆக குறைந்துள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளின் எண்ணிக்கை டாப் கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதிகமானோர் சிறந்த கல்லூரிகள் படிக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த டாப் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களும் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.