Advertisment

பொறியியல் மாணவர் சேர்க்கை: தவறான தகவல்களை நம்ப வேண்டாம் – தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை

பொறியியல் மாணாக்கர்கள் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் மற்றும் தங்களது பயனர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை யாரிடமும் பகிர வேண்டாம்; தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தல்

author-image
WebDesk
New Update
engineering admission

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம், தங்களது பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை யாரிடமும் பகிர வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 06.05.2024 முதல் தொடங்கி 06.06.2024 வரை நடைபெற்றது. மேலும் மாணாக்கர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 10.06.2024 முதல் 12.06.2024 வரை விண்ணப்ப பதிவு நீட்டிக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,09,645. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 1,97,601 தகுதியான மாணாக்கர்களுக்கான தரவரிசை பட்டியல் 10.07.2024 அன்று வெளியிடப்பட்டது.

தரவரிசை பட்டியல் வெளிப்படை தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tneaonline.org இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மாணாக்கர்களின் தரவரிசை எண் விண்ணப்ப எண், பெயர், பிறந்த தேதி, மதிப்பெண், வகுப்பு மற்றும் வகுப்பு தரவரிசை எண் ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் மாணாக்கர்களின் தொலைபேசி எண்ணோ மற்றும் மாவட்ட விவரமோ எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை.

மாணாக்கர்களின் நலனுக்காக கொடுக்கப்பட்ட தரவரிசை தகவல்களை சில சமூக விஷமிகள் தங்களது சுயநலத்திற்காக வேண்டி தவறான தொலைபேசி எண் மற்றும் தவறான மாவட்ட விவரங்களைக் கொண்டு மாற்றி அமைத்து வெளியிட்டது தெரிய வருகிறது. இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமான தரவு தளத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களுடன் 88.34% பொருந்தவில்லை.

இது தொடர்பாக சைபர் கிரைம் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு தரவுகளை தவறாக கையாண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ தகவல் சேமிப்பு கட்டமைப்பு firewall, secure socket layer certificate மற்றும் virtual private connection ஆகிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் தகவல்கள் சிறிதளவும் கசியாவண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு 22.07.2024 அன்று தொடங்கியது. இதுவரை சிறப்பு இட ஒதுக்கீட்டில் 836 மாணாக்கர்களுக்கும், முதல் சுற்றில் 24,177 மாணாக்கர்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் வெளிப்படைத்தன்மையாக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணாக்கர்கள் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் மற்றும் தங்களது User Name and Password-யை யாரிடமும் பகிர வேண்டாம். ஏதேனும் சந்தேகங்கள் எழும்பட்சத்தில் அருகில் உள்ள TFC மையத்தை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் அல்லது 1800-425-0110 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மாணாக்கர்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களது விருப்பத்திற்கு ஏற்றது போல் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Engineering Counselling Tn Engineering Admissions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment