தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 94,000ஐ தாண்டியுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு மே 6 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளிலே 20000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அடுத்த 2 நாட்களில் விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 50000ஐ தாண்டியது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் விண்ணப்பப் பதிவு தொடங்கிய 6 ஆவது நாளிலே விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 94,939 ஆக உயர்ந்துள்ளது.
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மே 11 ஆம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி 94,939 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 51,587 பேர் பணம் செலுத்தியுள்ளனர். 24,843 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்புகின்றனர். கடந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதை விட உயரும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“