TNEA Counselling: பொறியியல் கவுன்சலிங்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் இடங்கள் அதிகரிப்பு; பிரான்ச் வாரியான விபரம் இங்கே
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024: கல்லூரிகளில் அதிகரித்துள்ள இடங்களின் விபரம் வெளியீடு; கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த கோர்ஸ்களில் இடங்கள் கணிசமாக அதிகரிப்பு
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கல்லூரிகளின் இருக்கை விபரங்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
இந்தநிலையில், எந்த பாடப்பிரிவுகளில் இடங்கள் அதிகமாகியுள்ளன? எத்தனை கல்லூரிகளில் இடங்கள் அதிகமாகியுள்ளன? என்பதை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதலில் சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும்.
இந்தநிலையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கல்லூரிகளின் இருக்கை விபரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், கல்வி ஆலோசகர் அஸ்வின் எந்த பாடப்பிரிவுகளில் இடங்கள் அதிகமாகியுள்ளன? எத்தனை கல்லூரிகளில் இடங்கள் அதிகமாகியுள்ளன? என்பதை தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பில் கடந்த ஆண்டை விட 5320 இடங்கள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 17313 இடங்கள் உள்ளன. மேலும் கடந்த ஆண்டை விட 40 கல்லூரிகள் கூடுதலாக இந்த படிப்பை வழங்குகின்றன. அந்த வகையில் மொத்தம் 321 கல்லூரிகள் இந்த படிப்பை வழங்குகின்றன.
அடுத்தப்படியாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 4700 இடங்களும், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பில் 2850 இடங்களும் அதிகரித்துள்ளன. அடுத்து ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் மெசின் லேர்னிங் படிப்பில் 2120 இடங்களும், சைபர் செக்யூரிட்டி படிப்பில் 1937 இடங்களும் அதிகரித்துள்ளன.