தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் ஜூலை 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சாய்ஸ் ஃபில்லிங் என்பது என்ன? சீட் ஒதுக்கீடு என்பது என்ன? இந்த செயல்முறை எப்படி நடைபெறுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பொறியியல் கவுன்சலிங் ஆன்லைன் முறையில் நடைபெறும். இதில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப வேண்டும். இதில் உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, நீங்கள் தேர்வு செய்த விருப்பங்களில் இருந்து ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தநிலையில், பொறியியல் கவுன்சலிங்கிற்கான சாய்ஸ் ஃபில்லிங் எப்படி செய்ய வேண்டும் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
சாய்ஸ் ஃபில்லிங் செய்யும் போது நீங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை முதலில் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு அந்த இடம் கிடைக்காது என்று தெரிந்தாலும், உங்களுக்கு விருப்பமானதாக இருந்தால் அந்த இடங்களை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக 185 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கிடைப்பது கடினம். இருப்பினும் சாய்ஸ் ஃபில்லிங் செய்யும்போது மாணவர்கள் முதலில் அண்ணா பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி போன்றவற்றை தான் முதலில் தேர்வு செய்ய வேண்டும். இப்படியாக நீங்கள் விரும்பக் கூடிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்ததாக உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்த இடங்கள் எல்லாம் கிடைக்க வாய்ப்பு இருக்கோ அந்த இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
இறுதியாக, ஒருவேளை மேலே உள்ள எதிலும் கிடைக்காமல் போய்விட்டால், கவுன்சலிங்கில் ஒரு இடம் கிடைப்பதற்காக சில இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
சீட் ஒதுக்கீடு தரவரிசைப்படியே நடக்கும். இணைய வழி கலந்தாய்வு என்பதால், தரவரிசைப் படிதான் இடங்கள் ஒதுக்கப்படும். முதலில் பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட்டு, பின்னர் இடஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படும்.
அடுத்ததாக அக்செப்ட் அண்ட் அப்வர்ட் கொடுத்தால், உங்களுக்கு முதலில் ஒதுக்கப்பட்ட இடம் உங்கள் கையில் இருக்கும், அதற்கு மேல் உள்ள சாய்ஸ்களில் காலி இடங்கள் இருந்தால் அந்த இடம் ஒதுக்கப்படும். அதேநேரம் ஏற்கனவே ஒதுக்கிய இடம் ரத்து செய்யப்படும். இந்த இடத்தில் இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் வாய்ப்பு மாணவர்களுக்கு இருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.