தமிழகத்தில் ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்க்கைப் பெற்ற 1.31 லட்சம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) நடத்திய இரண்டு மாத கால ஆன்லைன் கவுன்சிலிங் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. 433 பொறியியல் கல்லூரிகளில் கவுன்சிலிங்கிற்கு 1.8 லட்சம் இடங்கள் உள்ளன. கவுன்சிலிங்கில் சுமார் 2.05 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கவுன்சிலிங் முடிந்த நிலையில் 49,000 இடங்கள் காலியாக உள்ளன. மூன்று சுற்று பொது கவுன்சிலிங், சிறப்பு கவுன்சிலிங் மற்றும் துணை கவுன்சிலிங் என ஆன்லைன் கவுன்சலிங் மூலம் மொத்தமாக சுமார் 1.31 லட்சம் மாணவர்கள் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கல்வியாண்டு அட்டவணை தெரிவிக்கிறது. அதேநேரம் துணை கவுன்சிலிங்கில் ஒதுக்கீடு பெற்ற, 7,623 மாணவர்கள், கல்லூரிகளில் சேர, செப்டம்பர் 15 வரை அவகாசம் உள்ளது. முதலாம் மாணவர்களுக்கு முதல் செமஸ்டரில் டிசம்பர் 19 கடைசி வேலை நாளாக இருக்கும். செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 27 ஆம் தேதி துவங்கும் என்று கல்வியாண்டு அட்டவணை தெரிவிக்கிறது.
இதற்கிடையில், கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) மற்றும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) உள்ளிட்ட பல்கலைக்கழக வளாகங்களில் இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கின் போதே இடங்கள் நிரம்பியதால் இந்தக் கல்லூரிகளில் செப்டம்பர் 2 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்தநிலையில், "முந்தைய ஆண்டை விட மாணவர் சேர்க்கை 15,100 (12%) அதிகரித்துள்ளது" என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் சில கல்லூரிகள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளன. இதன்மூலம் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் கணிதம் மற்றும் கணினித் திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். மேலும் எதிர்காலத்தில் தேவைப்படும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்கள் பற்றியும் கலந்துரையாடல் நடைபெறும். கூடுதலாக பதின்பருவம் மற்றும் உறவுப் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பதும் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“