அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில் உள்ள இன்ஜினியரிங் படிப்புகளின் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் கலந்துக் கொள்ள 1,93,853 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. சுமார் 440க்கும் மேலான கல்லூரிகளுக்கு ஒற்றை சாளர கவுன்சலிங் மூலம் இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங்கிற்கு 2,53,954 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளதாகவும், 2,09,645 விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதாகவும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தெரிவித்துள்ளது. மேலும், 1,93,853 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முந்தைய கடைசி தேதியான ஜூன் 6 வரை, மொத்தம் 1,76,145 விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றியிருந்தனர். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் அளித்து, ஜூன் 11 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது 1,93,853 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்தநிலையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) 2024 கமிட்டி, சான்றிதழ் பதிவுக்கு பணம் செலுத்திய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண்களை புதன்கிழமை வெளியிட்டது. விண்ணப்பதாரர்களுக்கு 10 இலக்க எண் சீரற்ற முறையில் ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் இணையதளமான https://www.tneaonline.org/ இல் ரேண்டம் எண்ணை அவர்களின் விண்ணப்பப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தெரிந்துக் கொள்ளலாம்.
புதன்கிழமை, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கமிட்டி விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை தொடங்கியது. அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அட்டவணையின்படி விண்ணப்பதாரர்கள் நேரில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு நேரில் கலந்துக் கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தின் இணைப்புக் கட்டிடத்தில் உள்ள நுழைவுத் தேர்வுகள் மற்றும் சேர்க்கை மையத்தில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
ஜூன் 22 ஆம் தேதி வரை தொடரும் முதல் கட்டத்தில், மொத்தம் 4,489 விண்ணப்பதாரர்கள் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல் நாளில் 460 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை விளையாட்டு வீரர்களுக்கு சுமார் 5,000 இடங்களை ஒதுக்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“